விடுதலையின் வக்கிரமும் அரவிந்தன் நீலகண்டனின் சகோதர பாசமும்

0

சென்னைக்கு விஜயம் செய்து சாதுர்மாஸ்ய சமயத்தில் சீடர்களுக்கு வேதாந்தக் கருத்துக்களை உபதேசித்து அருள் பாலித்து வரும் ஸ்ருங்கேரி ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்களை கல்கி பத்திரிக்கையில் சிறு பேட்டி கண்டு வெளியிட்டனர்.  சுயஜாதி அபிமானியும் ப்ராமணத்வேஷியுமான ஈரோடு ராமசாமி நாயக்கரின் சொத்தை ஏகபோகமாக பரம்பரை பாத்தியதையுடன் அனுபவித்து வரும் கி.வீரமணி தன் விடுதலை பத்திரிக்கையில் யார் இந்த சிருங்கேரி சங்கராச்சாரியார்கள்? என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். வழக்கம் போலவே வடிகட்டிய பொய்யை தம் வழக்கமான பாணியில் ஆதாரம் காட்டுவதாகக் கூறி புனைந்து வைத்துள்ளார். இதோ:


தமது குருநாதரான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் பற்றி சும்மா விளாசித் தள்ளி இருக்கிறார். அந்தக்குருநாதர் எப்படிப்பவட்டவர் தெரியுமா? ‘The Hindu Ideal’ எனும்  நூலை சிருங்கேரி மடம் வெளியிட்டுள்ளது. அதன் 23 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது:
‘The Panchama asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soaps and any clothing and decoration of it in the best uptodate style cannot remove from it its inlaid flith that has originated from the deep rooted contamination of filthy inheredity. ’
என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது. 

உலகத்தில் உள்ள எந்த உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவீன ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும் கூட பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது படிந்த அந்தத் தீட்டு – அழுக்கு பரம்பரைப் பரம்பரையாக ஆழமாக வேர் பிடித்து அவர்களின் பிறப்பிலேயே தொடர்ந்து வந்துள்ளதால் இதனை நீக்கவே முடியாது என்று சொன்னவர்தான் – இல்லை, இல்லை – திருவாய் மலர்ந்தருளியவர்தான் இவரின் குருநாதர்.
இது அடிப்படை ஆதாரமற்ற வழக்கமான திராவிடர் கழகத்தின் பராமணத்வேஷ, ஹிந்து விரோத பாரம்பரியத்தின் வெளிப்பாடு. The Hindu Ideal என்ற புத்தகம் குருமஹாஸந்நிதானம் ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸாமிகள் எழுதியதோ அல்லது அவர் ஆசீர்வதித்து வெளியிட்டதோ அல்ல. இதோ இதற்கான சுட்டி. விடுதலையின் சுட்டி கிடைத்த போது கோபம் வந்தலும் ஞாயிறு கண்டு ஞமலி குரைப்பதற்கெல்லாம் எதிர்க்குரல் தருவது மனிதச் செயல் அல்ல என்பதால் எதிர்வினை ஏதும் எழுதவில்லை. 

நிற்க.
The Hindu Ideal 
இது  சிருங்கேரி மடத்தின்பால் பற்றுக் கொண்டிருந்த ராமச்சந்திர ஐயர் என்ற வழக்கறிஞர் ஒருவர் 1901ஆம் வருடம் முதல் 1920 வரை திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களில் பேசிய பேச்சுக்களும் எழுதி வைத்த கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு. இவர் 1921ஆம் ஆண்டு சந்நியாசம் பெற்றுக் கொண்டு ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி ஆனார். அவர் சிருங்கேரியில் இருப்பதாக ஒரு படம் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புத்தகத்தை சிருங்கேரி மடத்தின் 33ஆவது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகளின் சிஷ்யர்களுக்கு ஆசிரியர் அர்ப்பணித்துள்ளார்.  இவர் குருமஹாஸந்நிதானம் ஸ்ரீஸ்ரீஅபிநவவித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் பரம குருநாதர். புத்தகத்தின் முன்னுரையில் சாதி பற்றிய தம் கருத்துக்கள் பலருக்கு ஏற்புடையதாகாது எனினும் தம் கருத்துக்களைச் சிந்தித்துப் பார்த்து ஏற்பதோ விடுப்பதோ செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார் ஸ்ரீ ராமானந்த ஸரஸ்வதியார். இந்தப் புத்தகத்தை சிருங்கேரி மடம் வெளியிடவும் இல்லை, மடத்தின் எந்த ஆச்சார்யரும் அதை ஆசீர்வதித்து ஸ்ரீமுகம் எதுவும் தரவும் இல்லை.


இதைத் திரித்து இக்கருத்து குருமஹாஸந்நிதானம் ஸ்ரீஸ்ரீஅபிநவவித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் உபதேசம் என்பது போல வீரமணி பொய்யுரைத்தது ஆச்சரியமில்லை. அதைச் சரிபார்க்காமல் பாலசுப்பிரமணியன் சரஸ்வதி என்பவர் முகநூலில் பகிர்ந்ததும் அவசரக் குடுக்கைத் தனம் என்று விட்டுவிடலாம். ஆனால் அதில் தரம் மிகக்குறைவான வார்த்தைகளால் குருமஹாஸந்நிதானம் ஸ்ரீஸ்ரீஅபிநவவித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளை ஏசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்று இதையும் புறந்தள்ளிவிடுகிறேன். போகட்டும்.


ஆனால் நீருக்கு மேல் ஓங்கி முகிழ்ந்து மணம் பரப்பும் மலர் ஒன்று நீருக்குள் மூழ்கி எழுவது விந்தையாக இருக்கிறது. மிக வேதனையான விஷயம் யாதெனில் புத்திஜீவியாக பவனி வரும் அரவிந்தன் நீலகண்டன் இத்தகைய ஒரு பதிவை சகோதரனின் நியாயமான ஆதங்கம் என்ற தலைப்பில் பகிர்ந்திருப்பது. அது அவரது தகுதிக்கு நேரானதல்ல. பல புத்தகங்கள் எழுதி, பல நல்ல விஷயங்களை உலகோர் அறிய அளித்து வரும் அரவிந்தன், கிடைத்த தகவலை cross verify  செய்யாமல் தம் முகநூல் பக்கத்தில் ”கடுமையான வார்த்தைகளின் பின்னால் இருக்கும் நேர்மையான நியாயமான வேதனையை
புரிய முடிகிறதா? கூடவே நம்முடைய சாதிய வக்கிரத்தையும் நம்மால்
உணரமுடிகிறதா?
” என்ற கேள்வியுடன் பாலசுப்பிரமணியன் சரஸ்வதி அவர்களின் வக்கிரத்தைப் பகிர்ந்துள்ளார். வெட்கக் கேடு இது.



மூத்த பத்திரிக்கையாளர் திரு. சுப்பு அவர்கள் எழுதிய திராவிட மாயை புத்தகத்தில் பக்கம் 112ல் சாதி வித்தியாசம் பாராட்டுவோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று சிருங்கேரி ஆச்சார்யர்கள் சொல்லியிருப்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். அரவிந்தன் இதை வாசித்திருக்கவில்லையா அல்லது சகோதர பாச மாயையில் இதை கவனத்தில் கொள்ளவில்லையா அல்லது திராவிடத்தின் வழமை போன்றே வசதியாக மறந்துவிட்டாரா தெரியவில்லை. 

dravidian      பண்பாட்டைப் பேசுதல்      


அரவிந்தன் நீலகண்டன் முக்கியஸ்தராக இருக்கும் தமிழ்ஹிந்து தளத்தில் வேத வேதாந்தக் கல்வி பயின்று துறவு நெறியில் பயணிக்க விழைந்த பறையர் சமுதாயத்தைச் சேர்ந்த உயர்திரு சிவானந்த  சர்மா சிருங்கேரி மடத்தின் பாட சாலையில் பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.


அதே தமிழ்ஹிந்து வெளியிட்ட பண்பாட்டைப் பேசுதல் என்ற புத்தகத்தில் ஸம்ஸ்க்ருதம் சில கேள்விகள் என்ற கட்டுரையில் (எழுதியவர் திராவிட மாயை சுப்பு அவர்கள்) சம்ஸ்க்ருதம் ப்ராமணருக்கான மொழி என்பது தர்ம விரோதம் என்ற சிருங்கேரி ஆச்சார்யரின் அறிவுரையை ஆதாரமாக வைத்துள்ளார். இதெல்லாம் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் கவனக்குறைவா அல்லது கர்ணனுக்கு நேர்ந்தது போல் தக்க சமயத்தில் தக்கதை மறக்கும் நிலையா அரவிந்தன் நீலகண்டனுக்கு என்று புரியவில்லை.

குருமஹாஸந்நிதானம் ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் சொல்லாத ஒரு கருத்துக்கு இத்தனை அசிங்கமான ஆர்ப்பாட்டம் ஏன் என்று ஆராயப் போந்தால் நியாயமான காரணம் கிட்டவில்லை. திராவிடர் கழகத்தின் ப்ராமணத்வேஷத்தையும் ஹிந்து விரோதத்தையும் பகிரும் பலரில் இவர்களும் அடங்குவர் என்றே முடிவுக்கு வர வேண்டியுள்ளது. ஒருவர் ஒன்று சொன்னார் என்று தகவல் வந்தால் தகவலைச் சொன்னவர் யார், தகவல் உண்மையா, திரிபுகள் ஏதும் உளவா என்று பார்த்த பிறகே அதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவும் ஆதரித்தோ எதிர்த்தோ கருத்துக் கூறவும் வேண்டும் என்பது அடிப்படை அறிவு. 


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
இனியாவது அரவிந்தனும் அவர் சகோதரரும் மெய்ப் பொருள் காணும் திறத்துடன் செயலாற்றுவர் என்று நம்புவோம். சிலரது அபிப்பிராயங்கள் போல “ப்ராமண  சந்நியாசிதானே! ஏசினால் என்ன செய்துவிடுவர்” என்ற எண்ணம் அரவிந்தனுக்கு இல்லை என்பது இன்றளவும் திண்ணம். அதே நேரம்  பால சுப்பிரமணிய சரஸ்வதியார் எண்ணத்தின் வண்ணம் குறித்து எனக்கேதும் தெரியவில்லை. ஆனால் சொல்லாத கருத்துக்களுக்காக ஒரு துறவியைத் தகாத வார்த்தைகளில் திட்டுவது நல்ல பெற்றோரால் நல்ல விதமாக வளர்க்கப்பட்டோர் செய்யும் செயல் அல்ல.

மேலும் இந்தக் கருத்துள்ள புத்தகம் எரிக்கப்படவேண்டியது என்று அநீ கருத்துக்கூறியதாக அறிகிறேன். உண்மையாக இருப்பின் அது பெருங்குற்றம். கருத்தைக் கருத்தால் எதிர்கொண்டு வெல்லும் தர்க்கத் திறமற்றோர் செய்யும் எதிர்க்கருத்துப் பிரசுரங்களை அழிக்கும் பிழைப்பு அறிவிஜீவிகளுக்கானது அல்ல. அப்படிச் செய்வோர் அறிவுஜீவிகளாய் வலம் வருவது சமுதாயத்து எக்காலத்திலும் உகந்த நிலையும் அல்ல. இது போன்ற அறிவீனங்களை ஆதரித்துக் கொண்டு, சகோதர பாசத்தால் வழுக்கி விழாதிருக்க அவர் மனதிற்கினிய புத்தபிரான் அரவிந்தன் நீலகண்டனுக்கு அருள்வராக.

சிவோஹம். சிவோஹம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *