ஈசன் என்றொரு பெயராலும் – இந்த
மானுடர் என்னைச் சுட்டிடுவார் – நான்
வேறு என்றவர் எண்ணிடுவார்

என்னை வணங்குதல் ஏனென்றே – இங்கு
வணங்கும் பலரும் தெளியாதார் – அவர்
தெளிந்தோர் சொல்லும் கேளாதார்


தென்னை மரமாய் உயர்வதுவும் – சில
பயிர்கள் செடியாய் நிற்பதுவும் – தம்
இயல்பின் படியே என்றறிக

திருட்டும் புரட்டும் தவறாமே – எனக்கு
நன்மை தீமை பிரிவில்லை – மாந்தர்
வினைத்ததன் பயனை வாழ்கின்றார்

நல்லன அல்லன பகுத்திங்கே – வினை
பலவும் புரியும் மாந்தர்கள் – அதன்
எதிர்வினை தாங்கி வாழ்வாரே

உம்வினை அதனின் எதிர்வினை – இந்தச்
சங்கிலித் தொடரில் உழல்கின்றீர் – எனை
அல்லன நேர்ந்தால் பழிக்கின்றீர்!

என்னைக் கேள்விகள் கேட்காதீர் – உமது
மனதின் உள்ளே துழாவுதலே – நீவிர்
உம்மை அறிவதின் ஆரம்பம்

சற்றே உம்மை உணர்கையிலே – இங்கு
உயிர்கள் ஒன்றே  என்கின்ற – அழியா
மெய்மை உணர்வீர் கொள்.

– பார்வதேயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *