சாதி என்பது ஒரு அடையாளம் என்பதாகத்தான் சிறு வயது முதல் எனக்குப் பழக்கம். டேய் ஐயரே.. டேய் தேவரே.. டேய் கோனாரே என்று சகஜமாக விளித்து விளையாடிய பள்ளிப்பருவம் என்னுடையது. என் ஆப்த நண்பன் ஒரு அந்தணன் அல்ல. ஆனால் அவன் வீட்டில் நானோ என் வீட்டில் அவனோ வேறுபாடுகள் சிறிதுமின்றிப் பழகியிருக்கிறோம்.

ஒன்பதாம் வகுப்பில் தான் சாதியின் திராவிட அரசியல் முகம் என்பது எனக்கு அறிமுகமானது. திமுக காரரான தமிழாசிரியர் ஒருவர் “ப்ராமணனாகிய உன்னை உட்கார்த்தி சூத்திரன் நான் பாடம் நடத்துகிறேனே இதுவே திராவிட இயக்கங்களின் சாதனை” என்றார். இதை நான் வீட்டில் சொல்ல எங்கள் குடும்ப நண்பர் ஒரு வழக்கறிஞர் சொன்னார்,” வெட்டித்தனமா பேசப்படாது. தமிழ்த் தாத்தா உவேசாவுக்கு மீனாக்ஷி சுந்தரம் பிள்ளைவாள் பாடம் நடத்திய போது திராவிட இயக்கம் என்ற எண்ணம் யாருடைய மனதிலும் கருக்கொள்ளக்கூட இல்லை”.

இதை நான் தமிழய்யாவிடம் கேட்க,’இதுக்கு தான் ஐயரே வேண்டாம்னு சொன்னார் பெரியார்’. ’வாத்தியாரை எதிர்த்துப் பேசுறியே, இதுதான் ஐயருக்கு அழகா’ என்றார். நான் தமிழய்யாவிடம் அடிவாங்குவது கண்ட தலைமை ஆசிரியர் விசாரித்து ’பசங்ககிட்ட ஜாதி பேசாதீங்க’ என்று அவரைக் கண்டித்தார்.

என் ஆப்த நண்பன் மறுநாள் தமிழய்யா சாதி ஒழிப்பு பற்றிய பாடத்தை நடத்தும் போது இப்பப் பாருடா என்று எங்களிடம் சொல்லிவிட்டு,   ’அதெல்லாம் ஒழியாதுன்னு எங்க சீயான் சொன்னாரு ஐயா’ என்று  சொல்ல ‘எதிர்த்து பேசாதே’ என்ற தமிழய்யாவுக்கு கிட்டிய பதில் “ஐயர்மகன் தானேய்யா எதித்து பேசக்கூடாது… நான் பேசுனாலுமா தப்பு!!”

மேற்கொண்டு பேசினால் அந்தச் சீயான் வந்து வெட்டுவாரோ என்ற அச்சமோ என்னவோ தமிழய்யா என் நண்பனைச் சீண்டியதில்லை. அப்போதிருந்தே எனக்கு எதிர்த்து நின்றால் சற்றேனும் சீண்டல் குறையும், நம்மைக் குறித்த அச்சம் சற்றே மரியாதையும் தரும் என்று புரிந்தது.

என் உபநயனத்துக்கு விடுப்பு எடுத்த போது பூணூல் போட்டுகிட்டு என் வகுப்புக்கு வரக்கூடாது என்று தமிழய்யா மிரட்ட, சரித்தான் போய்யா என்று சொல்லிவிட்டேன். விஷயம் மீண்டும் வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர் என்று போனது. என்னை மன்னிப்புக் கேட்கச் சொன்னார்கள். தலைமை ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டேன். தமிழய்யாவிடம் கேட்க மறுத்தேன். வற்புறுத்திய போது டிசி கொடுங்கள் நான் போகிறேன் என்றேன். (கொடுத்திருந்தால் என்ன செய்திருப்பேன்?)

அதன்பிறகு சத்ய சாயி பாபா சமிதி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம், வள்ளலார் சன்மார்க்க சங்கம், சிருங்கேரி மடம் என்று ஆண்டுகள் ஓடின. இங்கெல்லாம் சாதி என்பது புழக்கத்தில் இருக்கும் பெயர் போலப் பயன்பட்டது. வேறுபாடுகள் அறவே இருந்ததில்ல்லை. பணியிடங்களில் சாதிகள் தாக்கம் அதிகம் இருந்ததில்லை.

தமிழ் வலையுலகில் பிரவேசித்த பின் தாக்கியது சாதியின் கோர முகம்,. ஆனால் ஆங்கில வலையுலகில் இந்த அளவுக்கு சல்லித்தனமாக சாதியையோ மதத்தையோ வைத்து விளையாட மாட்டார்கள். பேசும் விஷயத்துக்குத் தக்க பதில் வரும். அவ்வளவே. தமிழ் வலையுலகில் பிழைப்பற்ற திராவிடக் கம்பெனி(கட்சி) ஆட்கள் கூச்ச நாச்சமில்லாமல் கூச்சலிடவே இருக்கிறார்கள். எதைச் சொன்னாலும் சொன்னவன் சாதி பார்த்த பிறகே அதற்கேற்ற கருத்து வருகிறது.

சமீபத்திய ஸ்ரீரங்கம் ப்ராமணாள் கபே விவகாரத்துக்குப் பிறகு ஒரு எண்ணம் தோன்றியது. ஐயன்சொல் என்று ஒரு அடையாளத்துடன் இருக்கும் நம் வலைப்பூவுக்கு ‘ப்ராமணாள் வலைப்பூ’ என்று அடைமொழி மாதிரி வைத்தால் என்ன என்று. என் ப்ளாக், என் இஷ்டம், நான் என்ன பெயர் வேண்டுமனாலும் வைப்பேன். எவன்/ள் கேட்பது? Proud to be Hindu (Brahmin) என்று badge அணிந்து தெருவில் நடமாடுவேன். என்ன செய்வீர்கள் திராவிடக் குஞ்சுகளே!!

வன்முறைக்கு அந்தணர் அஞ்சிய காலம் இப்போது இல்லை. இஃதொரு ப்ராமணன் நடத்தும் வலைப்பூவே. ஆகவே இது ப்ராமணாள் வலைப்பூ என்று சொல்லப்படுவதற்கு முழுத் தகுதி பெற்றதாகிறது. எனக்குப் இவ்விதப் பெயர் போரடிக்கும் வரை அப்படித்தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *