விவேகத்தின் வெள்ளியே வங்கத்தின் தங்கமே
வீண்வாத வன்முறையை வேரறுக்க வந்தவனே
கவனத்தைக் கைக்கொண்டு உலகத்தை வசம்கொண்டு
காலத்தைக் கடந்துநின்ற நற்புகழின் தனிச்சின்னமே

இல்லையென்றால் நீயில்லை இறந்துவிட்டால் இனியில்லை
அன்னையவள் பெருமையிது ஆணியடித்தாற் போலுரைத்தாய்
இளையோர்கள் உறுதியுடன் இதயங்கள் துய்யனவாய்
அன்னைபூமி காத்திடவே துணிவுகொள்ள ஆணையிட்டாய்

இளைஞர்க்கு எழுச்சியூட்டி இன்னல்கள் களையவந்து
இப்புவியின் சிறப்பதுவாம் சநாதனத்தைக் காத்தவனே
இந்துவுக்கு ஒருவீடு விருந்தோம்பல் செய்வதற்கு
இன்னபிற சொத்தெதுவும் தேவையில்லை வாழ்வதற்கு

என்றுரைத்த அறப்பரிசே மனம்நிறைத்த பேரொளியே
எல்லா உலகுக்கும் ஏற்றம்தரும் உன்வாக்கு
எழுந்து விழித்திருந்து எண்ணியது முடித்திருப்போம்
ஏத்துவோம் பணிந்துந்தன் ஈடில்லா வாக்குதனை!

 – பார்வதேயன்.
(சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12, இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வீரத்துறவியின் நினைவை போற்ற மட்டுமல்ல, அவரது எண்ணங்கள் ஈடேறவும் இளைஞர்கள் பாடுபடவேண்டும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *