ஸ்ரீ சந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள் எனும் மஹான்

0

மஹான்கள் பலரும் மலர்ந்த தேசம்
மஹிமைகள் மிளிரும் பாரத தேசம்
மனத்தினை அடக்கி மாதவம் புரியும்
மாபெரும் ஞானியர் இங்கே அதிகம்


நுணலுக்கு இரங்கி நிழல்தரு நாகம்
நல்லதோர் முதிர்ச்சி காட்டிடும் நேசம்
நான்மறை தெளிந்துரை எழுதிய சங்கரர்
நல்லதோர் பீடத்துக் குகந்த இடமாம்

துங்கை நதியின் தூயதோர் கரையில்
தங்கிச் சிறப்பாய் ஞானம் விளக்க
தங்கத் தாயவள் சாரதை  அருளுடன்
தன்னிக ரற்ற சங்கரர் துணிந்தார்

கல்விச் சிறப்பால் ஞான பலத்தால்
கலிபல விரட்டும் குருஞான மரபில்
காலடி புதுப்பித்த மஹானின் சீடராய்
காலடி பதித்தவர் ஆத்ம ஞானியார்

சிருங்க கிரியிலே பிறந்த சீராளர்
குருவின்அருளொடு கல்வி பெற்று
குருவின் பாதம் எண்ணி வாழ்வதே
சிறப்பெனத் தெளிந்த ஞானப் பிழம்பு

ஞாயிறுக் கொளிதரும் ஞானக் கடலிவர்
சிந்தை குளிர்விக்கும் மதிநிகர் முகத்தவர்
சிந்தனை என்பதே உலக நன்மைக்காம்
ஞாயிற்றுக் கிழமை அதில் மட்டுமில்லை

குருவெனில் இவராம் ஞானத் திருவிவர்
என்றே சீடர்பலர் பகரக் கேட்டயான்
குருவெனக் கண்டதோ பாரதீ தீர்த்தரை
என்குரு போலவே இவர்பெரும் ஞானியாம்

என்றே மனதில் நினைத்திடும் நிலையே
சிவனார் முதலாகி சங்கரர் கைதூக்கி
பாரதீதீர்த்த ரெனத் தொடர் ஞானமரபை
வரிசை யிட்டு வணங்கி வளர்வோம்.

-பார்வதேயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *