காலடி மண்ணில் உதித்துக்
காலம் பலவாய்த் தொடர்ந்த
தொல்லற முறைமை தொகுத்து
அறுவகை வழியாய் வைத்தான்

ஈசனின் தோன்ற லனைய
வீச்சவன் ஞானம் கேளீர்
அறிஞர்கள் பலரை வென்றே
அகத்தினை வென்றான் பாரீர்

காண்பது கேட்பது விடவும்
விசாரம் மேலென வைத்தான்
விவேகம் எதுவெனக் காட்ட
ஞானச் சூடாமணி தந்தான்

சூனியம் சுற்றிடும் உள்ளம்
சூரியனாய் ஒளிர வாகாய்
உபநிடத உட்பொருள் உரைத்து
உள்ளங்கள் உயரச் செய்தான்

மறைபொருள் மனதில் நிற்க
மந்தணப் பொருள கற்றி
சூட்சும வேதப் பொருளை
விழைவோர் தெளிய விரித்தான்

கிரியெனும் சீடன் தத்தி
என்றவர் வியந்து நோக்க
தோடகர் என்றே ஏத்தி
குருவருள் பெருமை போற்றி

ஞானியர் சான்றோர் இவரொடு
ஞாலத்தின் சுழல் உணராத
சாமானிய மாந்தர் உய்ய
சாதக வழிகள் வகுத்தான்

காலடி உதித்த சங்கரர்
காலடி ஒட்டியே தத்தம்
காலடி வைப்பவர் வாழ்வு
காலத்தை வெல்வ துறுதி.

– பார்வதேயன்

காலடி சங்கரர் காலடி யொட்டிதம்
காலடி வைப்பவர் குரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *